வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் !

டிண்டா, பண்டா, பர்வல்… வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் !

NorthIndianVeg

டிண்டா, பண்டா, பர்வல்… இவை ஏதோ வட மாநிலங்களில் உள்ள இடங்களின் பெயர்கள் என்று எண்ணி விடாதீர்கள். நமது கத்திரிக்காய், கோவைக்காய் போல வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ருசியான காய்கறிகள்தான் இவை. தென்இந்தியப் பகுதிகளில் காணக்கிடைக்காத இந்தக் காய்கறிகளைப் பற்றி ஆச்சரியமான தகவல்களை நமக்குச் சொன்னார்… உத்தரபிரதேச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் டாக்டர். சையது அஷ்ரப் மகபூப். தோட்டக்கலை தொடர்பான பல நூல்களை எழுதியுள்ள இவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ‘ரஃபி அகமது கித்வாய் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸ்’ நிறுவனத்தின் துணை இயக்குநராக இருக்கிறார்.

 

வித்தியாசமான இந்தக் காய்கறிகள் பற்றி சையது அஷ்ரப் மகபூப் சொன்ன விஷயங்கள் இதோ…

 

டிண்டா: இதை ஆங்கிலத்தில் இந்தியன் ரவுண்ட் கார்ட் (Indian round gourd) என அழைக்கிறார்கள். கோடைக்காலப் பயிரான இது, ஓர் ஆண்டில் பத்து மாதங்களுக்குக் கிடைக்கிறது. பழுக்காத தக்காளி போல் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் டிண்டாவில் கால்சியம் சத்து அதிகம். பஞ்சாப், உத்தரபிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இது அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. லேசான பச்சை மற்றும் அடர்பச்சை என இரண்டு நிறங்களில் விளையும் ரகங்கள் உண்டு. தர்பூசணி குடும்பத்தைச் சேர்ந்த இதில், சத்துக்கள் அதிகம்.

 

விதைத்த 45 நாட்கள் முதல் 50 நாட்களில் டிண்டாவை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் சராசரியாக பத்தாயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தியப் பயிரான இது, வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்படுகிறது. இருந்தா லும், தென்னிந்தியாவில் பயிராகாமல் இருப் பது ஆச்சரியமே. இந்தப் பயிர் தென்னிந்தியாவில் அருமையாக வளரும். குறிப்பாக, தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் அதிக மகசூல் கிடைக்கும்.

 

பர்வல்: இது கோவைக்காயின் ஒரு வகை. இதில் இரண்டு ரகங்கள் உண்டு. நீள் உருண்டை வடிவத்தில் இரு முனைகளும் சற்று கூராக இருப்பது ஒரு ரகம். கரும் பச்சை நிறத்தில் வரி வரியாக இருப்பது மற்றொரு ரகம். இது, வட இந்தியா முழுவதும் கிடைக்கும். பெங்கால் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இவ்விரு மாநிலங்களில் கோடைக்காலப் பயிராகவும், பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் மழைக்காலப் பயிராக வும் பயிரிடுகிறார்கள். இதை ஒரு முறை பயிரிட்டால் போதும். தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். கோடைக்காலத்தில் செடி காய்ந்து போனாலும், வேர் உயிருடன் இருக்கும். ஒரு மழை வந்தவுடன் செடி துளிர்த்து விடும். கொடியை நிலத்தில் பரவ விட்டால், அதிக மகசூல் கிடைப்பதுடன், பழ ஈ தாக்குதலும் குறைவாக இருக்கும். பந்தலில் சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்காது. ஒரு ஹெக்டேர் நிலத்தில், 12 ஆயிரம் கிலோ முதல் 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் காயில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்-ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகமாக உள்ளன

 

பச்சை காலிஃபிளவர்: இந்தியில் ‘ஹரி கோபி’ என அழைக்கப்படும் இது, இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிர். பார்ப்பதற்கு காலிஃபிளவரைப் போலவே இருக்கும். ஆனால், இதில் பூ பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதில், 3.3 சதவிகிதம் புரோட்டீன், வைட்டமின்-ஏ, வைட்டமின் பி-1 மற்றும் பி-2 சத்துக்கள் உள்ளன. இது, 1,000 மீட்டர் முதல் 1,200 மீட்டர் உயரத்திலும் வளரக் கூடியது.

 

பண்டா: கிழங்கு வகையைச் சேர்ந்த இது, கேரளத்தின் கப்பக்கிழங்கைவிட தடிமனாக இருக்கும். இதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக்கி சமைத்து உண்ணலாம். கால்சியம் சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த பண்டா… ஒன்று முதல் ஐந்து கிலோ எடை வரையில் கிடைக்கிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில் விளையும் பண்டா, சேப்பங்கிழங்கைப் போலவே சாகுபடி செய்யப்படுகிறது.

 

நிறைவாகப் பேசிய சையது அஷ்ரப் மகபூப், ”இந்தக் காய்கறிகள் தமிழகத்திலும் நன்றாகவே விளையும். ஒரே நாட்டின் வடபகுதியில் பிரபலமான இவற்றை தென்பகுதியில் விளைவிக்காமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது” என்றார்!

 

Check Also

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *