கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது!

திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ‘பச்சைப் போர்வை விரித்த சோலை’யாக காட்சியளிக்கிறது, ஊர். இங்கே பல ஆண்டுகளாக மொந்தன் ரகத்தை விளைவித்து, தன் வாழ்க்கையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளில் ஒருவராக ஜொலிக்கிறார் அண்ணாமலை..

பாதை காட்டிய பசுமை!

”விவசாயக் குடும்பத்துல பிறந்திருந்தாலும், குடும்ப வறுமையால பத்தாவது முடிச்சதும் மிலிட்டரிக்குப் போய்ட்டேன். 15 வருஷம் சிப்பாய் வேலை பாத்தேன். லீவுல வீட்டுக்கு வரும்போது அப்பாகூட சேர்ந்து தோட்டத்துல வேலை செய்வேன். மிலிட்டரியில இருந்து ‘ரிடயர்டு’ ஆன பிறகு, இங்க விவசாயம் பாக்க ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல கஷ்டப்பட்டாலும், போகப்போக விவசாய வேலையெல்லாம் பழகிடுச்சு.

நெல், கரும்பு, வாழைதான் முக்கிய பயிருங்க. இதன் மூலமா கிடைச்ச ஓரளவு வருமானத்தை வெச்சு ஓட்டிக்கிட்டு இருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன விதைநெல் வாங்க போளூர் டெப்போவுக்கு போனேன். அங்க ஒருத்தர் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருந்தார். அதைப்பத்தி அவர்கிட்ட கேட்டப்போ, விலாவாரியா எடுத்துச்சொல்லி, அந்தப் புத்தகத்தை என்கிட்ட கொடுத்தார். வீட்டுக்கு வந்து முழுசா படிச்சேன். ‘டிரம் சீடர்’ பத்தி எழுதியிருந்தாங்க. உடனே, டிரம் சீடரை வாங்கிட்டு வந்து, ஒரு ஏக்கர் நிலத்துல ஏ.டி.டி-45 ரக நெல்லை விதைச்சேன். வழக்கமா நாத்து விடுறதுக்கு நாப்பது கிலோ விதைநெல் தேவைப்படும். ஆனா, இந்த மிஷின்ல விதைக்கிறப்போ பத்து கிலோதான் தேவைப்பட்டுச்சு. விளைச்சலும், ஏக்கராவுக்கு 35 மூட்டை (75 கிலோ மூட்டை) கிடைச்சுது. அதைப் பார்த்துட்டு, எங்க ஊர் முழுக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறிட்டாங்க. அதுல இருந்து விடாம பசுமை விகடனைப் படிச்சு…. கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கிட்டிருக்கேன்” என்று முன்கதை சொன்ன அண்ணாமலை, தொடர்ந்தார்.

தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்த்த சொட்டுநீர்!

”இங்க தண்ணிக்குத் தட்டுப்பாடு வந்ததால, கரும்பு, நெல் விவசாயத்தைக் குறைச்சுட்டு பயறு வகைகளைப் போட வேண்டியிருந்தது. அப்பறம், 4 ஏக்கராவுக்கு சொட்டுநீர்ப் பாசனம் போட்ட பிறகு, வாழை, மஞ்சள், கரும்புனு திரும்பவும் பணப்பயிருக்கு மாறிட்டேன். தொடர்ச்சியா ஒரே பயிரா சாகுபடி செய்யாம, சுழற்சி முறையில அப்பப்போ நெல்லையும் சாகுபடி செய்றேன். நெல்லுக்கும் சொட்டுநீர்தான். போன போகத்துல 25 சென்ட் நிலத்துல நெல் போட்டதுல, 9 மூட்டை மகசூல் கிடைச்சுது.

நம்பிக்கை கொடுக்கும் பணப்பயிர்கள்!

மஞ்சள், வாழை, கரும்பு மூணையும் ஒரே நேரத்துல சாகுபடி செஞ்சா… ஒண்ணு கை விட்டாலும், ஒண்ணு ஈடு கொடுக்குமுனு ஒரு நம்பிக்கை. அதனால, மூணையும்தான் சாகுபடி செய்வேன். மொத்தம் இருக்குற 5 ஏக்கராவுல, ஒரு ஏக்கராவுல கரும்பு; ரெண்டரை ஏக்கராவுல நெல்; 20 சென்ட்ல மஞ்சள்; 30 சென்ட்ல கோ-4 தீவனப்புல்; 50 சென்ட்ல மாந்தோப்பு; 25 சென்ட்ல மொந்தன் வாழை; 25 சென்ட்ல வீடு, கொட்டகை, பாதைனு இருக்கு.

வழக்கமா, வாழைக்கு அதிகமா ரசாயனத்தைக் கொட்டுவோம். பசுமை விகடன் கொடுத்த ஊக்கத்துல, ரசாயனத்தைக் கொஞ்சமா போட்டு… மண்புழு உரத்தை அதிகமாக்கினதுல, மொந்தன் வாழை ஜோரா வந்திருக்கு” என்ற அண்ணாமலை, 25 சென்ட் நிலத்தில் மொந்தன் வாழை சாகுபடி செய்யும் முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது அப்படியே பாடமாக இங்கே…

25 சென்ட்… 200 வாழை!

‘மொந்தன் ரக வாழையின் சாகுபடி காலம்… ஓராண்டு . அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில் வடிகால் வசதி அவசியம். சாகுபடி நிலத்தை உளிக்கலப்பை மூலம் ஓர் உழவும், கொக்கிக் கலப்பை அல்லது ரோட்டாவேட்டர் மூலமாக மூன்று உழவுகளும் செய்து மண்ணைப் ‘பொலப்பொல’ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு, செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை ஏழரை அடி இடைவெளியில், ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி ஆழம் என்ற அளவுக்குக் குழி எடுத்து, ஒரு வாரம் வரை ஆறப்போட்டு… (இது, நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்காக) 5 கிலோ தொழுவுரத்தோடு, மேல் மண்ணைக் கலந்து குழியை நிரப்ப வேண்டும். பிறகு, பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கிக் கொண்டு, இரண்டு மாத வயதுள்ள (இவ்வயதில் கிழங்கில் இருந்து ஈட்டி போல, இலை துளிர்த்து இருக்கும்) கன்றுகளை நடவு செய்ய வேண்டும் (25 சென்ட் நிலத்துக்கு 200 கன்றுகள் தேவைப்படும்).

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!

நடவு செய்த 5-ம் நாள் உயிர்தண்ணீரும், அதற்குப் பிறகு வாரம் ஒரு தண்ணீரும் கொடுத்தால், போதுமானது. 30 மற்றும் 60-ம் நாட்களில் மாடுகள் பூட்டிய ஏர் அல்லது பவர் டில்லர் மூலம் களை எடுக்க வேண்டும். 90-ம் நாள், ஒரு டன் மண்புழு உரத்துடன், 50 கிலோ காம்ப்ளக்ஸ், 25 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மரத்துக்கு ஐந்தரை கிலோ வீதம் வைத்து மண் அணைத்துவிட வேண்டும். வேறு உரங்கள் எதுவும் தேவை யில்லை. மொந்தன் ரகத்தில், பூச்சி, நோய் தாக்குதல் பெரியளவில் இருக்காது. மரத்தைச் சுற்றி இருக்கும் பக்கக்கன்றுகளில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கன்றுகளை அகற்றி விட வேண்டும். அவ்வப்போது, காய்ந்த சருகுகளையும் கழித்து சுத்தப்படுத்த வேண்டும். நடவு செய்த 7-ம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பித்து, 9-ம் மாதத்திலிருந்து 12-ம் மாதத்துக்குள் அறுவடைக்கு வரும்.’

ஒரு தாருக்கு 7 சீப்புகள்!

சாகுபடி பாடம் முடித்த அண்ணாமலை, ”200 மரங்கள்ல 10 மரங்கள் சேதாரமாயிருச்சு. மீதமிருக்கற 190 மரங்கள்ல, ஒவ்வொரு தார்லயும் அஞ்சு சீப்புலருந்து 7 சீப்பு வரை இருக்கு. ஒவ்வொரு சீப்புலயும் பத்துல இருந்து பன்னெண்டு காய் வரை இருக்கு. ஒரு மரம் ( பூ, தண்டு உட்பட) 150 ரூபாய்னு விலை பேசியிருக்கேன். மொத்தம் 190 மரத்துக்கும் 28 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். எல்லா செலவும்போக, 18 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தொடர்புக்கு, அண்ணாமலை,
செல்போன்: 89730-93432.

Check Also

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *