வட இந்தியாவில் பல மாநிலங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை அறுவடை தாமதமாகியுள்ளது.
10 நாட்கள் தாமதம்
கோதுமை அறுவடை பொதுவாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டில் மழையால் கோதுமை அறுவடை தாமதம் ஆகியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 10 நாட்கள் தாமதமாக அறுவடை தொடங்கும் என்றும் பஞ்சாப் மாநில விவசாய துறை இயக்குனர் எம்.எஸ். சாந்து தெரிவித்தார்.
அறுவடை தாமதம் ஆகியுள்ளதால் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்துதான் கோதுமை வரத்து விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் கோதுமை கொள்முதல் அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து சூடுபிடிக்கும். கடந்த ஆண்டில் ஏப்ரல் 10–ந் தேதி முதல் சந்தைகளுக்கு கோதுமை வரத்து தொடங்கியது.
நடப்பு ரபி கொள்முதல் பருவத்தில் (2014 ஏப்ரல் – 2015 மார்ச்) பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 1.15 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் 1.10 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.
பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கடந்த 24–ந் தேதியன்று கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் மேலும் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை தொடருமானால் அது கோதுமை மகசூலை பாதிக்கும் என வேளாண் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘‘அறுவடை சமயத்தில் முதிர்ச்சி அடைவதற்காக கோதுமை பயிருக்கு சூரிய ஒளி தேவைப்படும். ஆனால் இந்த சமயத்தில் மழை பெய்தால் அமோக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது’’ என்று ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
பஞ்சாப், அரியானா
உணவு தானியங்கள் உற்பத்தியில் பஞ்சாபும், அரியானாவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ரபி பருவத்தில் பஞ்சாபில் 38 லட்சம் ஹெக்டேரிலும், அரியானாவில் 25 லட்சம் ஹெக்டேரிலும் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது.
நன்றி தினத்தந்தி