நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.
- 15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போட வேண்டும்.
- இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துகள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும். ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இட வேண்டும்.
- ஊட்டமேற்றிய தொழுஉரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும், ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.
- வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும்.
- நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.
- விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும். வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும்.
- எனவே, தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன் பெற முடியும்.
நன்றி: தினமணி