மரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்

மரவள்ளிப் பயிர்களை 3 விதமான பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அவற்றை முறையான வழிகளில் கட்டுப்படுத்தினால் அதிக மகசூலை பெற முடியும்.

மரவள்ளியின் கால அளவு 9 முதல் 10 மாதங்கள். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது.

பெரும்பாலும் முள்ளுவாடி என்ற ரகமும், கேரள ரோஸ் ரகமும்தான் அதிகம் பயரிடப்படுகின்றன. தற்போதுள்ள அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பூச்சிகள் தாக்குகின்றன.இப் பயிரை தாக்கும் பூச்சிகளும் அதை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் வல்லுநர் என்.விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

 • மரவள்ளியை பொறுத்தவரை மாவுப்பூச்சி, வெள்ளை ஈ, செஞ்சிலந்தி என்ற 3 வகையான பூச்சிகள் தாக்குகின்றன.

மாவுப் பூச்சி:

 • மாவுப்பூச்சி தாக்குதல் 5-வது இலையில் இருந்து ஆரம்பித்து கீழ்ப்பகுதியில் இருக்கும் மாவுபோன்ற பொருள் அடையைப் போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்.
 • இலைக் காம்பு, செடியின் தண்டு ஆகியவற்றில் இருந்து சாற்றை உறிஞ்சும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.

கட்டுப்படுத்தும் வழிகள்:

 • இப் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான இலைகளை கிள்ளி எடுத்து எரித்துவிட வேண்டும்.
 • மரவள்ளி குச்சிகளை நடும்போதே சாய்வாக நடலாம்.
 • மரவள்ளி குச்சியில் 33 சதவீத அளவு ஸ்டார்ச் இருக்கிறதா? என்பதை பரிசோதித்து நட வேண்டும். மரவள்ளி கிழங்கை சுற்றி முசுக்கொட்டை (மல்பெரி), பப்பாளி, நெய்வேலி காட்டாமணக்கு ஆகிய செடிகளை பயிடலாம்.
 • கிரிப்டோபஸ் மான்செட்ரோசூரி என்ற ஆஸ்திரேலிய பொறி வண்டை ஒரு ஏக்கருக்கு 500 விட்டால் வெண்மை படலத்தை சாப்பிட்டுவிடும்.மாவுப் பூச்சியும் அழிந்துவிடும்.
 • 3 சதவீத வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 25 மில்லி அல்லது மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டருக்கு 40 மில்லி சேர்த்து தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.
 • அசிரோபேகஸ் பப்பையா என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 ஏவி விட்டும் மாவுப் பூச்சிகளை அழிக்கலாம்.
 • தாக்குதல் அதிகம் இருந்தால் புரோப்பனோபாஸ் என்ற ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

வெள்ளை ஈ:

 • ஈ போன்று பறந்து செல்லும். கொசுவைப் போல் சிறியதாக இருக்கும்.
 • இவை மரவள்ளியின் முதல் நான்கு இலைகளில் இருக்கும். மொசைக் என்ற நோயை உருவாக்கும். இது ஒரு வைரஸ் நோயாகும்.

கட்டுப்படுத்தும் வழிகள்:

 • மொசைக் நோய் தாக்காத மரவள்ளி குச்சிகளை நட வேண்டும்.
 • துத்தி செடிகளை மரவள்ளியின் அருகில் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்.
 • வரப்புகளில் மணத்தக்காளி போன்ற செடிகளை பயிரிட வேண்டும்.
 • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி ஒரு ஏக்கருக்கு 25 என அதிகாலை காலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை வைக்க வேண்டும்.
 • இந்த ஒட்டுப்பொறி மீது வெள்ளை கிரீஸ் தடவ வேண்டும்.இது பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும்.
 • அதிக தழைச்சத்து உரத்தையும், அதிக நீர்ப்பாசனத்தையும் தவிர்க்க வேண்டும்.
 • மரவள்ளி செடிகளை 9 முதல் 10 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
 • என்கார்சியா கெüடாலூப்பே என்ற ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 2000 ஏவிவிட்டும் இப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
 • 3 சத வேப்ப எண்ணெய் 1 லிட்டருக்கு 5 மி.லி அல்லது மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டருக்கு 20 மி.லி கலந்து தெளிக்க வேண்டும்.
 • தாக்குதல் அதிகம் இருந்தால் 4 மாதத்துக்கு உள்பட்ட செடிகளுக்கு மீத்தைல் டெமடான் என்ற ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து தெளிக்கலாம்.
 • 4 மாதத்துக்கு மேல் உள்ள செடிகளுக்கு டெசபோன் என்ற மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து தெளிக்கலாம்.
 • 8 மாதத்துக்கு மேற்பட்ட செடிகளுக்கு பென்டிரோ பேத்ரின் என்ற மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1.50 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

செஞ்சிலந்தி:

 • இப் பூச்சிகள் கண்களுக்கு தெரியாது. உருப்பெருக்கி மூலம் மட்டுமே இப் பூச்சிகளை பார்க்க முடியும்.
 • இப் பூச்சிகள் தாக்கினால் இலையின் நடுப்பகுதி மஞ்சள் நிறமாக மாறும்.இதனால் ஒளிச்சேர்க்கை குறைந்து மகசூல் பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிகள்:

 • தாக்குதல் குறைவாக இருப்பின் டெகாலஸ் என்ற பூச்சிக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.50 மில்லி கலந்து இலையின் நடுப்பகுதி நனையுமாறு விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.
 • மரவள்ளி நட்ட 3-வது, 5-வது, 7-வது மாதங்களில் இதை தெளிக்கலாம்.
 • தாக்குதல் அதிகம் இருந்தால் பிராப்பர் கைட் என்ற மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லியும், அதனுடன் கார்பன்டைசீன் என்ற மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராமும் சேர்த்து இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும்.
 • மேற்சொன்ன 3 விதமான பூச்சிகளின் தடுப்பு நடவடிக்கையின் போதும் செடிகளின் வேர்ப் பகுதியில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

நுண்ணூட்டச் சத்துக்களை கொடுக்க வேண்டும். தழைச் சத்துக்களை குறைத்து சாம்பல் சத்துக்களை (நைட்ரஜன் உரங்களை தவிர்த்து பொட்டாஷ் உரங்கள் அளிப்பது) கொடுக்க வேண்டும். இதனால் மரவள்ளி செடிகள் நல்ல முறையில் வளரும் என்றார்.

நன்றி: தினமணி

Check Also

கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்

தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *