மதுரை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை மையம்

பல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி, மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த கிராமங்களின் மண் வளத்தைக் கண்டறியும் பொருட்டு, ஆய்வு மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பரிசோதனை மையத்தை, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வட்டாரம் கருமாத்தூர் கிராமத்தில் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

நடமாடும் மண் பரிசோதனை மையம் குறித்து, வேளாண் இணை இயக்குநர் அ.ஜெ.அ. ஜெய்சிங் ஞானதுரை கூறியது:

மண்ணில் உள்ள உவர் மற்றும் களர் பிரச்னைகளைக் கண்டறியவும், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளின் அளவினை துல்லியமாகக் கணக்கிட்டு கண்டறியவும், அதற்கான நவீன மின்னணு கருவிகள் இந்தப் பரிசோதனை ஊர்தியில் பொருத்தப்பட்டுள்ளன.

மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளின் நிலையை, மிகத் துல்லியமாகக் கணினி உதவியுடன் டிஜிட்டல் முறையில் இயங்கக் கூடிய மின்னணு கருவி மூலம் கண்டறியும் வசதியும் உள்ளது.

நாளொன்றுக்கு 150 மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனையைத் துல்லியமாகவும், சரியான நேரத்தில் செய்து முடிப்பதற்கான அனைத்து வசதிகளும் இந்த ஊர்தியில் உள்ளது. இதில், மூன்று வேளாண் அலுவலர்கள், ஒரு உதவி வேளாண் அலுவலர், இரு ஆய்வக உதவியாளர்கள் உள்ளனர்.

நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், உடனடியாக மண் மற்றும் நீரின் கார, அமில, உப்புத் தன்மைகளை அறிந்திடலாம். மைக்ரோ சத்துகளான இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு ஆகியவைகளின் அளவுகளையும் கண்டறியலாம்.  மண் பரிசோதனைக்கு ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும். கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரின் தன்மையையும் இந்தப் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்யலாம்.

நன்றி: தினமணி

Check Also

மண் வள அட்டை

” மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைப்படி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *