மண்புழு உரம் தயாரித்தல்

 உரக்கூடம் அமைத்தல்:

 • மண்புழு உரக்கூடத்தை தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப அமைக்கலாம்.
 • நீள்வாக்காக கிழக்கு, மேற்காக நல்ல காற்றோட்ட வசதியுடன் உரக்கூடங்களை அமைக்க வேண்டும்.
 • மண்புழுவின் எதிரியான எறும்பைக் கட்டுப்படுத்த சிறிய நீர்வாய்க்கால் தொட்டியின் வெளிப்புற அடிப்பாகத்திலோ அல்லது தொட்டியின் சுவர் விளம்புகளின் மேற்புறத்திலோ அமைக்க வேண்டும்.
 • எலி, பாம்பு, ஓணான், தவளை, ஆந்தை போன்றவற்றில் இருந்து மண்புழுவை பாதுகாக்கும் வகையில் தொட்டிகளின் மேல் சிறுகண் வலைகள் அமைப்பது அவசியம்.
 • மண்புழுக்களுக்கு உணவு அளிக்கும்போது நன்கு மக்கிய உணவை தொட்டியின் மேல்விளிம்பில் இருந்து 2 அங்குலம் குறைவாக இருக்கும்படி நிரப்ப வேண்டும்.
 • தொட்டிக்குள் 40% ஈரப்பதம் இருக்கும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 • மேல்மட்ட புழுக்களாக இருந்தால் புழு விடுவித்த 7 முதல் 14 நாள்கள் கழித்து ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது 2 நாள்களுக்கு ஒருமுறை 2 அங்குலத்துக்கு மிகாமல் உணவுப்படுக்கையின் மேல் உள்ள குருணை வடிவிலான புழு எச்சங்களை மட்டும் தனியாக சேகரிக்க வேண்டும்.
 • இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்புழு உரத்தை 3 மி.மீ. கண்கொண்ட சல்லடைகளில் சலித்து உரத்தை பாலித்தீன் காகிதம் ஒட்டப்பட்ட அடர்மிகு பாலி எத்திலின் பைகளில் அடைத்து இருட்டான அறையில் 40% ஈரப்பதத்தில் சூரியஒளி படாத வகையில் வைத்து பயன்படுத்தலாம்.
 • மண்புழு உர தயாரிப்புத் தொட்டியில் ஊற்றப்பட்ட உபரிநீர் கீழே திரவ உரமாக வெளிவரும்.இதுவே “வெர்மிவாஷ்’ எனப்படும்.இதில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால் பயிர்கள் எளிதில் இச்சத்துக்களை உட்கிரகித்து செழிப்பாக வளரும்.

மண்புழு உரம் தயாரித்தலின் செயல்முறை விளக்கங்கள்

 • மண்புழுவைக்கொண்டு மக்கு உரம் தயாரிக்க சாணம், மண் மற்றும் நிழலான இடம் தேவைப்படும். நன்கு சமமான சற்றே மேடான நிலப் பகுதியில் 3 மீட்டர் அகலம் 2 மீட்டர் நீளம், 1 அடி ஆழத்திற்கு தொட்டி அமைக்க வேண்டும்.
 • அடியில் உடைத்த செங்கல் மற்றும் மணல் பரப்ப வேண்டும்.
 • இது தண்ணீர் அதிக அளவில் தேங்காமல் தடுக்க கூடியது. அந்த மண்ணை நன்றாக நனையும் அளவிற்கு ஈரப்படுத்த வேண்டும்.
 • நிழலில் காய்ந்த பொடி செய்த மாட்டுச்சாணத்தை ½ அடி உயரத்திற்குப் பரப்பி ஈரப்படுத்த வேண்டும்.
 • இவற்றின் மீது மண்புழுக்களை விட்டு சாணியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மண்புழுக்கள் மீது ஊற்ற வேண்டும்.
 • அதற்கு மேல் காய்கறி கழிவுகளை பரப்பி வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும். இதனை தினமும் ஈரப்படுத்துதல் வேண்டும்.
 • மண்புழுக்கள், சாணத்தை தின்று கழிவுகளை குவியல் குவியலாக வெளியிடும். இந்த குவியலை வாரம் ஒருமுறை அப்புறப்படுத்தி நிழலில் காய வைத்து உபயோகிக்கலாம்.
 • மண்புழுக் கழிவுகளில் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தழை, மணி, சாம்பல் சத்துடன், சுண்ணாம்பு மற்றும் மெக்னீஸியம் சத்தும் நிறைந்து காணப்படும் மண்புழு உரம் தயாரித்தல் மிகவும் எளிதானதாகும்.
 • 45 முதல் 60 நாட்களில் 1 கிலோ எடையுள்ள மண்புழுக்கள் 10 கிலோ அளவில் மண்புழுக்களை உற்பத்தி செய்யும்.
 • மாட்டுச்சாணம், காய்கறி கழிவுகள் தீரத்திர அவற்றை மீண்டும் இட வேண்டும்.
 • 45 நாட்களில் மண்புழு உரம் தயாராகி கறுப்பு நிறத்தில் காணப்படும். இது நன்கு மக்கியமைக்கான அறிகுறி ஆகும்.
 • இத்தகைய இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடும் பயிர்கள் மற்றும் விளைப் பொருட்கள் நல்ல சுவையுடனும், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காதவனவாகவும் இருக்கின்றன. விவசாய ஆர்வலர் குழுக்கள் மண்புழு உரத்தினை தயார் செய்து, விற்பனை செய்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார்.

Check Also

மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *