பயிர் பாதுகாப்பில் வேம்பு!

பூச்சிகொல்லி மருந்துகள் நமக்கும் நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடுகள் விளைவிக்கின்றன.  சுற்றுப்புறச்சூழலும் மாசுபடுகிறது.  ஆதலால் பயிர்பாதுகாப்பில் தாவரப்பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவது தற்போது விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது.

தாவரப்பூச்சிக்கொல்லிகளினால் மிகவும் முக்கியமானது வேம்பு ஆகும்.  சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதில்  வேம்பிற்கு ஈடான மரம் வேறொன்றும் இல்லை.  வேப்ப மரத்தின் இலைகள், வேப்பங்கொட்டை, வேப்பம் பிண்ணாக்கு, வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைச்சாறு அனைத்தும் விவசாயிகளுக்கு உதவுகிறது.  வேம்பில்  உள்ள அசாடிராக்டின் என்ற இரசாயணப் பொருளே பூச்சிக்கொல்லி தறனுக்கு முக்கிய காரணமாகும்.   வேம்பு நேரடி பூச்சி கொல்லியாக மட்டுமல்லாமல் பூச்சி விரட்டியாக  பூச்சி உணவு குறைப்பானாக பூச்சிகளின் வளர்ச்சித் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

வேப்பங்கொட்டைச்சாறு மேற்கூறியவற்றில் மிகச் சிறப்பாக நெற்பயிரில் புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலை சுருட்டுப்புழு, கதிர் நாவாய்ப்பூச்சி, கதிர் ஈ,  பருத்தியில் வெள்ளை ஈ மற்றும் துவரை கொண்டைக்கடலையில் காத்துளைப்பான்களையும் கட்டுப்படுத்தவல்லது.

தயாரிக்கும்முறை: வேப்பங்கொட்டையை உடைத்து வேப்பம் பருப்பு எடுக்க வேண்டும்.  பருப்பைத் தூள்செய்து 50 கிராம் பருப்புத் தூளிற்கு 1 லிட்டர் நீர் என்ற விகிதத்தில் நீர் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.  பிறகு வடி கட்டி, ஒரு லிட்டர் வடிகட்டிய திரவத்துடன்  1 மிலி டீபால் என்ற அளவில் கலந்து கரசலை வயலில் தெளிக்க வேண்டும்.  (டீ பாலுக்குப் பதில் காதி சோப்பைப் பயன்படுத்தலாம்)  ஒரு ஏக்கருக்கு 12.5 கிலோ வேப்பம் பருப்பும் 200 லிட்டர் தண்ணீரும் 200 மிலி டீ பால் அல்லது 2 பார் காதி சோபொ தேவைப்படும்.

எச்சரிக்கை: கைத்தெளிப்பான்களை மட்டுமே தெளிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.  காலை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது.

 

Check Also

வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி?

தை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *