“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்து பயிர்கள், மலர் பயிர்கள், காய்கறிபயிர்கள், பழப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
- மாவட்டதில் இயங்கி வரும், 125 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 30 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்கள் வழங்கி தானிய உற்பத்தி பெருக்கப்பட்டு வருகிறது.
- கடன் வழங்கும் போது இடுபொருட்களான விதைகள், யூரியா, டிஏபி, சூர்ப்பர் பாஸ்பேட், மற்றும் கலப்பு உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது, மாவட்டத்தில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், விவசாயிகள் இயற்க்கை உரங்களான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
- கம்போஸ்ட் என்பது மக்கிய தாவர அல்லது விலங்குகளிடம் இருந்த பெறப்படும் கருமை நிற உரமாகும்.
- இந்த உரத்தை மண்ணில் இடும்போது மண்ணின் தன்மை சீர்படுவதோடு மிக முக்கிய சத்துகள் பயிர்களுக்கு எடுத்து கொடுக்கப்படுகிறது.
- இந்த உரத்தை நடவுக்கு முன்னாலும், நடவுக்கு பின்பும் வயல்களில் இடலாம்.அனைத்து வகை பயிர்களுக்கும், மலைப்பயிற்களுக்கும் பழவகை பயிர்களுக்கும் , காய்கறிகளுக்கும் மற்றும் மரவகைகளுக்கும் கம்போஸ்ட் உரங்களை அவசியம் இட வேண்டும்.
- கடந்த, 30 ஆண்டுகளாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணில் அங்கக தண்மை குறைந்து மிகவும் உயிரற்ற மண் ஆகி வருவதால், அங்கக தண்மையை அதிகப்படுத்த கம்போஸ்ட் உரங்களை இடவேண்டும்.
- கம்போஸ்ட் உரங்களை இடும்போது, மண்ணின் காற்றோட்ட வசதி கூடுகிறது.
- மண்ணின் அங்கக தன்மை உயர்வதால் மண்ணின் ஈரப்பதம், நீர்நிலை நிறுத்தும் தன்மை, மண்வளம் ஆகியவை அதிகரிக்கிறது.
- உயிர் உயரங்களாகிய அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
- மண்ணின் வெப்ப நிலை, அமில தன்மை ஆகியவை சீராக வைக்க உதவுகிறது.
- மண்ணின் ரசாய உரங்களை எளிதில் பயிரிக்கு எடுத்து கொடுக்கிறது.
எனவே, விவசாயிகள் அனைத்து வகை பயிர்களுக்கும் இயற்கை உரமான கம்போஸ்ட் உரத்தை இட்டு விளைச்சல் பெருக்கி அதிக லாபம் பெறலாம், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்