ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் வெங்காயம் ஏற்றுமதி 28% சரிவடைந்தது

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் வெங்காயம் ஏற்றுமதி 28 சதவீதம் குறைந்து 11.08 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 15.39 லட்சம் டன்னாக இருந்தது.

பலத்த மழையால் சேதம் மற்றும் கையிருப்பு குறைந்ததால் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் உள்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100 -ஆக உயர்ந்து இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு உள்நாட்டில் வெங்காய சப்ளையை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் வெங்காயம் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

குறைந்தபட்ச விலை

ஆகஸ்டு 14-ந் தேதி முதல் மத்திய அரசு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச விலையை படிப்படியாக அதிகரித்தது. அதாவது அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச விலையை காட்டிலும் குறைந்த விலையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியாது. இந்நிலையில் கரீப் பருவ வெங்காயம் சந்தைக்கு வர தொடங்கியதை அடுத்து குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை குறைக்க தொடங்கியது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான குறைந்த பட்ச விலையை 350 டாலரிலிருந்து 150 டாலராக (1 டன்னுக்கு) குறைத்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி 1.33 லட்சம் டன்னாக அதிகரித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதி 1.21 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் சர்வதேச சந்தையில் 1 டன் வெங்காயத்திற்கான விலை ரூ.18,600 உயர்ந்திருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ.9,300 ஆக குறைந்தது. இதனையடுத்து அம்மாதத்தில் வெங்காயம் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 55 சதவீதம் குறைந்து ரூ.248 கோடியிலிருந்து ரூ.113 கோடியாக சரிவடைந்தது.

தற்போது மத்திய அரசு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச விலையை நீக்கி உள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Check Also

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *