அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும்

அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சில மாநிலங்களில் உள்ள கோதுமை வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாய ஆணையர் ஜே.எஸ். சந்து தெரிவித்தார்.

குளிர்கால பயிர்

கோதுமை குளிர்கால பயிராகும். ரபி பருவத்தில் (அக்டோபர்–மார்ச்) மிக முக்கிய பயிரான கோதுமை அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நடப்பு பருவத்தில் கூடுதலாக 61 ஆயிரம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் கோதுமை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும், முந்தைய சாதனை அளவுகளை விஞ்சி உற்பத்தி அதிகரிக்கும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்திருந்தது. எனினும் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக குஜராத்தின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட பருவநிலை கோளாறுகளால் அரசு மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

61 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு கோதுமை பயிர் பாதிக்கப்பட்டிருந்தால் நடப்பு பருவத்தில் கோதுமை விளைச்சல் சென்ற ஆண்டு அளவிற்கே இருக்கும் என சந்து குறிப்பிட்டார். கடந்த ரபி பருவத்தில் 9.35 கோடி டன் கோதுமை உற்பத்தியாகி இருந்தது. நடப்பு பருவத்தில் விளைச்சல் 9.56 கோடி டன்னாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதத்தை மற்ற மாநிலங்களின் உற்பத்தி ஈடு செய்யும் என சந்து மேலும் கூறினார்.

குஜராத்தின் உள்புற பகுதிகள், பீகார் ஆகிய இடங்களில் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலவரம் மோசமாக இல்லை. பருவநிலை மாற்றங்களால் பல மாநிலங்களில் கோதுமையுடன், மற்ற ரபி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோரிக்கை

இந்நிலையில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பயிர் சேதத்திற்கு மத்திய அரசின் இழப்பீடு வேண்டி கோரிக்கை விடுத்துள்ளன. எனவே விரைவில் மத்திய அரசுக் குழு ஒன்று பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட உள்ளது. கோதுமை விதைப்பு பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை நடைபெறுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *