அம்மான்பச்சரிசி-Euphorbia Hirta

அம்மான் பச்சரிசி என்றவுடன் இது அரிசியின் ஒரு வகையோ என நினைக்க தோன்றும். ஆனால் ஒரு சிறு மூலிகை என்பது பலருக்கு தெரியாத ஓன்றாகும். அதுவும் நாம் கானுமிடமெல்லாம் தானாகவே முளைத்து கிடக்கும் ஓன்றுதான். அம்மா என்பது உயர்ந்த எனப்பொருள்படும் தமிழ்சொல்லாகும்.

உறவுகளில் சிறந்த உறவான தாய் மாமனை அம்மான் என்று குறிப்பிடுவது தமிழகத்தில் உள்ளது. சிறு குழந்தையை வளர்க்க பயன்படும் தாய்பாலை பெருக்கும் குணம் கொண்டதால் இதை அம்மான் என்ற அடைமொழியுடன் சேர்த்து அம்மான்பச்சரிசி என அழைத்தனர்.

இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும் தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகையும், இதில் சிவப்பு, வெள்ளை என இரு இனமும் உண்டு. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஈரப்பதமுள்ள அனைத்து இடங்களிலும் தானே வளர்கிறது. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது. இதன் காம்பைக் கிள்ளினால் பால் வரும்.

இலைகளை அரைத்தோ அல்லது அரைக்காமலோ பாலில் அல்லது தயிரோடு சேர்த்து உண்ண வெப்ப நோய்கள் அனைத்தும் நீங்கும். இதன் காயை துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கலே வராது. இளமை பருவத்தில் உடல் தளர்ந்து குடும்ப வாழ்க்கை வாழ முடியாமல் துவண்டு போனவர்கள் தூதுவளை இலையுடன் அம்மான்பச்சரிசி இலையை துவையல் செய்து சாப்பிட தாது பெருகும், உடல் பலப்படும்.

வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கை, கால் வலியால் துடிப்பார்கள். குனிந்தால் வாயு பிடிப்பு என அவதிப்படுவார்கள் இவர்கள் அம்மான்பச்சரிசி இலையை மென்மையாக அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து மோரில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டுவந்தால் ஒரு மாதத்தில் வாத நோய்கள் குணமாகும். இலையை கலவைக்கீரையுடன் சமைத்து உண்டு வந்தால் உடல் வறட்சியை நீடிக்கும். இதனை சுடுசோற்றில் இட்டு முதல் உணவாக சாப்பிட்டால் உதடு மற்றும் நாக்கில் தோன்றும் வெடிப்புகளை போக்கும்.

ஒரு சிலருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகும்.. எந்த மருத்துவம் பார்த்தாலும் எரிச்சல் அடங்காது. செய்வினை என சொல்லி துன்பப்படுவார்கள். இவர்கள் கீழாநெல்லியுடன் சமஅளவு அம்மான் பச்சரிசி இலையை மையாக அரைத்து காலை மதியம் இருவேளையும் எருமைத்தயிரில் கலந்து குடித்து வர உடல் எரிச்சல், நமைச்சல் சில வாரங்களில் தீரும்.

நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் சில தாய்மார்களுக்கு போதுமான அளவிற்கு பால் சுரக்காது. இவர்கள் அம்மான் பச்சரிசியின் பூக்களை 30கிராம் அளவு சேகரித்து மையாக அரைத்து கொட்டைப்பாக்களவு பசும் பாலில் கலந்து ஒரு வாரம் குடித்தால் தாய்ப்பால் போதுமான அளவு பெருகும். செடி உள்ள இடத்திற்கு அருகில் சென்று தண்டை கிள்ளினால் வரும் பாலை உடனடியாக மருவில் தடவி வந்தால் அவை உதிர்ந்துவிடும். நகச்சுற்றில் தடவிவர நகச்சுற்று போகும்.

மனிதர்களுக்கு அழகை கொடுப்பது அவர்களின் தோல் தான். அது நிறம் மாறும் போது அவர்களின் அழகு மாறுபாடு அடைகிறது. அதிலும் வெண்குஷ்டம் என்பது தோலில் வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றி உடல் முழுவதும் வெள்ளை நிறம் பரவி விகாரமாக காட்சி அளிக்கும். இவர்கள் அம்மான் பச்சரிசி கிழாநெல்லி, வெந்தயம், ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 15 கிராம் அளவில் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வந்தால் வெண்குஷ்டம் போகும். இதைத்தான்

” காந்தல் விரணமலக் கட்டுமேந் கந்தடிப்புச்
சேர்ந்த திணவிவைகள் தேகம்விட்டுப் பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிச் குண்மை இனத்துடனே
கூடும்மா ணொத்த கண்ணாய்! கூறு “

என்கின்றது அகத்தியர் குணவாகடம்.. மூலிகையை கண்டறிந்து அதை பயன்படுத்தி அதை பயன்படுத்தி நோய்களை தீர்ப்பது எவ்வாறு என்பதை அறிந்து பயன்படுத்துவது என்பது நம்மால் முடியாத ஓன்றாகும். ஆனால் நமது முன்னோர்கள் நமக்காக கண்டறிந்து வழங்கிய மூலிகையை பயன்படுத்தி நமது வாழ்வை நலமாக அமைத்து கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.

நன்றி தினகரன்

One comment

  1. i would like to subscribe this website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *