அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் தேவைப்பாடு அதிகரித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம்

சர்வதேச சந்தையில் இயற்கை விவசாய முறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப் பொருள்கள் விற்பனை சூடுபிடித்து வருகிறது. மொத்த நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மண்டலங்களில் சாகுபடி செய்யாத நிலங்களில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மொத்த ஏற்றுமதியில் மதிப்பு கூட்டப்பட்ட நறுமணப் பொருள்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எனவே, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், பிராண்டு மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்புகள் அறிமுகம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் ஓர் அங்கமாக வெவ்வேறு பகுதிகளில் நறுமணப் பொருள்கள் பூங்கா அமைக்கப்பட உள்ளது என நறுமணப் பொருள்கள் வாரியத்தின் தலைவர் ஏ.ஜெயதிலக் தெரிவித்தார்.

நறுமண பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஆய்வு கூடங்கள் மற்றும் பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாசனை சாக்லேட் விற்பனை அதிகரிக்கும் வகையில் முன்னணி சாக்லேட் உற்பத்தியாளர்களுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்–டிசம்பர்) நறுமணப் பொருள்கள் எற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 27 மற்றும் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தேவைப்பாடு அதிகரித்தது மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் ஏப்ரல் – டிசம்பர் மாத காலத்தில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 5.72 லட்சம் டன் மற்றும் ரூ.9,433 கோடியாக உயர்ந்துள்ளது.

புதினா

ஏற்றுமதியில் புதினா மற்றும் புதினா பொருள்கள் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் 2.06 லட்சம் டன் மற்றும் ரூ.2,202 கோடியாக இருந்தது. சீரகம் உள்ளிட்ட நறுமண விதைகளின் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 96,500 டன் மற்றும் ரூ.1,282 கோடியாக உயர்ந்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Check Also

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *