கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விளையும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் அனுப்பப்படுகிறது. கடந்த சில வருடங்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து அனுப்பப்படுகிறது. தற்போது தேவை அதிகம் உள்ளதால், செவ்விளநீருக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இளநீரின் விலை ஏற்றமாக இருந்தாலும், வெளியூர் வியாபாரிகள் பொள்ளாச்சிக்கு நேரடியாக வந்து போட்டி போட்டு கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் செவ்விளநீர், 20 லட்சம் பச்சைநிற இளநீர் வெளிமாவட்டங்களுக்கு னுப்பப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில், செவ்விளநீர் கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘தோப்புக்கு நாங்கள் நேரடியாக வந்து ஒரு இளநீர் ரூ.15 முதல் 16 வரை கொள்முதல் செய்கிறோம். இது தவிர ஏற்று, இறக்க கூலியையும் கணக்கில் கொண்டு விற்பனை விலை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளது’ என்றார்.
நன்றி தினகரன்